கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் திருமதி ஹரினி அமரசூரிய தலைமையில் (03) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இவ் ஆலோசனைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள உகன, பொத்துவில் பிரதேசங்களில் இயங்கிவரும் உப - கல்வி வலயங்களை தனியான கல்வி வலயங்களாக இயங்குவதற்கான செயற்பாடுகள் கடந்த 05 வருட காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சு, கிழக்கு மாகாண ஆளுநர், உகன - பொத்துவில் பிரதேசங்களுக்கான தனியான கல்வி வலயங்களை வழங்குவதற்கான சிபார்சுகளை வழங்கியும் மத்திய கல்வி அமைச்சு, அமைச்சரவை தீர்மானம் எடுத்தும் இதுவரை அப் பிரதேசங்களுக்கான தனியான கல்வி வலயங்களாக இயங்குவதற்கான அனுமதியினை கல்வி அமைச்சு வழங்காமல் உள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
இது தொடர்பாக நான் பிரதமருடன் 06 மாதங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தேன். அப்போது கல்வி அமைச்சின் செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர்களுடன் கலந்துரையாடிவிட்டு குறித்த வலயங்களுக்கான அனுமதியை வழங்குவதற்கான விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இவ்வாறு தெரிவித்து 06 மாதங்கள் கடந்தும் குறித்த கல்வி வலயங்களுக்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில், கல்வி அமைச்சின் செயலாளர்கள், உயர் அதிகாரிகள், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டிருப்பதனால் இது தொடர்பான தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினையும் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை முன்வைத்தார்.
கல்வி அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரிடம் குறித்த உகன - பொத்துவில் பிரதேசங்களுக்கான தனியான கல்வி வலயங்கள் தொடர்பான விபரங்களை தெரிவிக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.
கருத்துரையிடுக