சற்று முன் புதுடில்லி செங்கோட்டை அருகில் குண்டு வெடிப்பு. 8 பேர் பலி. பலர் காயம். பல வாகணங்கள் தீப்பற்றி எரிந்து நாசம்.!!


 சற்று முன் புதுடில்லி செங்கோட்டை அருகில் குண்டு வெடிப்பு. 8 பேர் பலி. பலர் காயம். பல வாகணங்கள் தீப்பற்றி எரிந்து நாசம்.

டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் கேட் 1 அருகே இருந்த காரில் இருந்த மர்ம பொருள் வெடித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

டெல்லி செங்கோட்டை அருகே இன்று மாலை 6.30 மணியளவில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. இதையடுத்து அந்தக் கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அருகே இருந்த 4 வாகனங்கள் வரை தீப்பற்றி சேதமடைந்துள்ளன என டெல்லி தீயணைப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.

டெல்லி செங்கோட்டை பகுதி மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது. சாந்தினி சவுக் மார்க்கெட் உட்பட பல முக்கிய பகுதிகள் இதன் அருகே அமைந்துள்ளன.

இந்த சூழலில் கார் வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் கார் வெடித்ததும் அலறியடித்து தப்பியோடினர்.

இதுதொடர்பாக தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், காரில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர்.

இந்தச் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எதற்காக கார் தீப்பிடித்தது? கார் வெடிக்கும் அளவுக்கு என்ன நடந்தது? யாருடைய கார் என்றும், எதற்காக இந்த பகுதிக்கு கார் கொண்டு வரப்பட்டது என்பது பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் மாலை வேளையில் அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் வேலை முடிந்து பலர் செல்லக்கூடிய நேரத்தில் இந்த பயங்கரச் சம்பவம் நடந்துள்ளது. இதனால், சதி வேலையாக இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

காரில் இருந்த மர்ம பொருள் வெடித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அது திட்டமிட்டு வைக்கப்பட்ட வெடிகுண்டாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பினருக்கு ஆதரவாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஹரியானாவில் 350 கிலோ வெடிபொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் டெல்லியில் கார் குண்டு வெடித்து பலர் பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்