உலக பாரிசவாத தினத்தையொட்டி கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு
உலக பாரிசவாத தினம் அக்டோபர் 29 ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது. குறித்த தினத்தையொட்டி கல்முனை பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவு ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் தலைமையில் இன்று (29) இடம்பெற்றது.
”ஒவ்வொரு நிமிடமும் பெறுமதியானது” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கல்முனை வடக்கு மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், தனியார் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இவ்விழிப்புணர்வு நிகழ்வு சைக்கிள் ஓட்டம், நடைபவனி, தொங்கோட்டம், துண்டுப்பிரசுரம் விநியோகம் அடங்களாக பேரணியாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வரை சென்றதுடன் அங்கிருந்து அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையை அடைந்து மீண்டும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நிறைவடைந்தது.
பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ,எம்.எஸ்.இர்ஷாட் இந்நிகழ்வினை மிகவும் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


















கருத்துரையிடுக