தியாக தீபம் நினைவு வாகனம் மீதும் பாராளுமன்ற உறுப்பினர்  செல்வராசா கஜேந்திரன் மீதும் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் அங்கஜன் இராமநாதன்.!!

தியாக தீபம் நினைவு வாகனம் மீதும் அதனோடு பயணித்த பாராளுமன்ற உறுப்பினர்  செல்வராசா கஜேந்திரன் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்ட காடைத்தனமானது இனவாத சிந்தனையின் அடையாளமாகும்.

தமிழ் மக்களுக்காக அகிம்சை வழி போராட்டத்தில் ஈடுபட்டு இன்னுயிரை கொடுத்த தியாக தீபன் திலீபன் அவர்களது 36 வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, நினைவு ஊர்தி பயணம், கிழக்கு மாகாணத்தில் ஆரம்பித்து வடக்கு மாகாணம் நோக்கி வருகை தந்துள்ள நிலையில், இன்று திருகோணமலை கப்பல்துறை பகுதியில் காடையர்களின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் இடம்பெற்றுள்ளதை காணொளிகள் ஊடாக அவதானிக்க முடிகிறது.

அமைதிவழி போராட்டம் செய்த ஒருவரை, அமைதிவழியில் நினைவு கூருவதற்குள்ள உரிமையையும், தார்மீக கடமையையும் நாட்டில் உள்ள அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்நாட்டில் உள்ள சக இன மக்களின் உரிமைகள், இறைமை, சமத்துவம் என்பனவற்றை புரிந்து கொள்ளாமல் காலங்காலமாக ஒரு சில சக்திகளின் நலனுக்காக உருவாக்கப்பட்ட வன்முறைகள் மற்றும் கலவரங்களின் விளைவுகளை இந்நாடு நிறையவே கடந்து வந்துள்ளது.

அந்த வன்முறைகளின் அறுவடையாக பெரும் போரையும், பொருளாதார நெருக்கடிகளையும் நாட்டு மக்கள் அனுபவித்தார்கள். அதிலிருந்து மீண்டெழுவதற்கு இன ஒற்றுமை அவசியம் என அண்மைக்காலமாக உணரப்பட்டும் வந்துள்ளது.

அவ்வகையில் வலிகளின் வடுக்களோடு வாழும் இனத்திற்கு ஆறுதல் தரக்கூடியவையாத நினைவேந்தல்கள் அமைகின்றன. தமக்காக உயிர் கொடுத்தோரை நினைவுகூர்தல் என்பது நாகரீகம் வளர்ச்சியடைந்த ஒவ்வொரு இனங்களுக்குமேயான பண்பாகும்.

அத்தகைய நினைவேந்தல்களை குழப்பும் வகையில் வன்முறைத்தாக்குதல்களை நடாத்தி அதிலிருந்து அரசியல் ஆதாயம் தேட பேரினவாத எண்ணம் கொண்டோர் செயற்பட்டு வருகின்றனர் என்பதை இன்றைய சம்பவம் மீளவும் உறுதி செய்கிறது.

நாட்டின் பெரும் கௌரவத்துக்குரிய தேசியக்கொடியை இந்த வன்முறைத்தாக்குதலுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது குறித்த நபர்கள் இந்நாட்டினை இழிவுபடுத்தியுள்ளனர். அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம்.

வன்முறையாளர்களை தடுக்க விரும்பமின்றியோ அல்லது தடுக்க முடியாமல் நின்ற பாதுகாப்பு தரப்பு கூட தம்நாட்டின் தேசியக்கொடி அவமதிக்கப்படுவதை கண்டும் காணாமல் நின்றமையானது இந்நாட்டின் மீது அவர்கள் கொண்டுள்ள பற்றுதலை கேள்விக்குறியாக்கியுள்ளது.

அத்துடன் இந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் மீது வெறிகொண்ட தாக்குதலை செய்ய சிலர் தூண்டப்பட்டிருப்பதானது கடந்தகாலத்தில் இந்த இனம் சந்தித்திருந்த வன்முறைகளை நினைவுபடுத்துகிறது.

இன்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தை மிகக்கடுமையாக கண்டிப்பதோடு அச்சம்பவத்தோடு தொடர்புடைய வன்முறையாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.

ஒரு இனத்தை வஞ்சித்து தமது ஆதாயங்களை பெற முயலும் தரப்புகள், அதன் மோசமான விளைவுகளை சந்திப்பார்கள் என்பது வரலாறு எமக்கு சொல்லியுள்ள உண்மையாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்